இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது நண்பர்கள், உறவினர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் இடங்களில் கடந்த 26ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆயிரம் சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என்றார். வருமான வரித்துறை சோதனையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பியதாக செந்தில் பாலாஜி கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். நான்காவது நாளாக இன்று தினமும் வருமான வரித்துறையினர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சரின் ஆதரவாளர்களின் இடங்களில் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.