அதிரவைத்த 6 கொலைகள்…அத்தனைக்கும் காரணம் ஒரு பெண்ணா?Jolly Joseph Case -ல் அதிரடி திருப்பம்

334
Advertisement

இந்தியாவையே நடுநடுங்க வைத்த சம்பவம்தான் ஜோளி ஜோசப் வழக்கு. மாமியார், மாமனார், கணவர், என தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை, சந்தேகமே வராத அளவுக்கு அடுத்தடுத்த இடைவெளிகளில் படுகொலை செய்ததாக, ஒரு பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டது…இந்தியாவில் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. காரணம், அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ ஆவணப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டியில் வெளியாகி இருப்பதுதான் அந்த பரபரப்புக்கு காரணம்.

அதேநேரத்தில், இந்த ஆவணப்படம் ஒரு தலைபட்சமாக வெளியாகிருக்கிறது. இந்த ஆவணப்படத்திலேயே கொலைக்கான ஆதாரங்களும் ஆவணங்களும் சுட்டிக்காட்டப்படவில்லை. இதனால், ஜோளி ஜோசப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படாமல் விடுதலை ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிற சட்ட வல்லுனர்கள், அது தொடர்பான பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தியாவையே குலைநடுங்க வைத்த ஜோளி ஜோசப் வழக்கில் நடந்தது என்ன? எப்படி நடந்தன இந்த மர்ம மரணங்கள்? அத்தனை கொலைகளையும் ஜோளி ஜோசப் மட்டும்தான் செய்தாரா? இன்னமும் இந்த கொலைவழக்கில் விடை தெரியாத மர்மங்களும் சந்தேகங்களும் என்னென்ன?

புகார்தாரர் மற்றும் காவல்துறை தரப்பு தகவலாக மட்டுமல்லாமல், குற்றம்சாட்டப்பட்ட ஜோளி ஜோசப்பின் பாயிண்ட் வ்யூவிலும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது இந்த செய்தி தொகுப்பு…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச்சேர்ந்த உறவினர் ராய் தாமஸை 1997 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் ஜோளி ஜோசப். திடீரென்று ஜோளி ஜோசப்பின் மாமியார் அன்னம்மா சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து இறந்துவிடுகிறார். சில வருடங்கள் கழித்து மாமனாரும் சாப்பிட்டபிறகு மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிடுகிறார். அதற்குப்பிறகு, சில வருடங்கள் கழித்து ஜோளி ஜோசப்பின் கணவரும் திடீரென்று மர்மமான முறையில் இறந்துபோய்விடுகிறார். அதோடு நிற்கவில்லை. ஜோளி ஜோசப் கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய மேத்யூ மஞ்சாடியில் என்பவரும் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.

சில வருடங்கள் கழித்து ஷாஜு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் ஜோளி ஜோசப். அதற்கு முன்பு ஷாஜுவின் குழந்தையும் மனைவி சிலியும் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள்.
அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஜோளி ஜோசப்தான் என அவரது நாத்தனார் ரெஞ்சி வில்சன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டவர்தான் ஜோளி ஜோசப்.

6 கொலைகளுக்கான காரணங்கள்…

குற்றச்சாட்டு 1: வேலைக்கு போகச் சொல்லி நிர்பந்தம் கொடுத்ததாலும் தன்னுடைய கல்வித்தகுதியை கண்டுபிடித்துவிடுவார் என்பதாலும் மாமியாருக்கு உணவில் விஷம் வைத்து கொலைசெய்துவிட்டார் என்பது முதல் குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு 2: எம்.எஸ். மேத்யூ என்பவருடன் ஜோளி ஜோசப் நட்பாக பழகி வந்ததை கண்டித்ததாலும் சொத்துக்களை தனது பெயரில் மட்டுமே எழுதி கொடுக்காததாலும் மாமனாரை விஷம் வைத்து கொன்றுவிட்டார் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு 3: புதிய சொகுசு வாழ்க்கை வாழ கணவரையே கொன்றுவிட்டதாக மூன்றவது குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு 4: கணவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பிக்கொண்டே இருந்ததால் உறவினர் மேத்யூ மஞ்சாடியில் என்பவரை கொலை செய்ததாக நான்காவது குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு 5: ஷாஜு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள திட்டம்போட்டு அவரது முதல் குழந்தையை வளர்க்கமுடியாது என்பதால் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஐந்தாவது குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டு 6: ஷாஜுவின் மனைவி, இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருப்பார் என்பதால் அவரது மனைவி சிலியை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஆறாவது குற்றச்சாட்டு.

ஜோளி ஜொசப்புக்கு விஷம் எப்படி கிடைத்தது?
நகைக்கடையில் வேலை செய்யும் ஜோளி ஜோசப்பின் நண்பர் எம்.எஸ். மேத்யூ மூலம் வாங்கி இப்படி அனைவருக்கும் கலந்து கொடுத்துவிட்டார் என்பதுதான் காவல்துறையின் குற்றச்சாட்டு. இன்னமும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஆவணப்படமோ அவர் மட்டுமே, இந்த 6 கொலைகளையும் செய்த கொலைக் குற்றவாளி என தீர்ப்பு எழுதிவிட்டது.

இந்த நிலையில்தான், ஜோளி ஜோசப்பின் பாயிண்ட் ஆஃப் வியூவில் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.
காதலித்து, திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என எதிர்பார்ப்பு, கனவுகளோடு வந்த ஏழ்மையான பெண் ஜோளி ஜோசப் மீது, தங்களது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் செலுத்தி பொய்யான கல்வித்தகுதி, திருமணத்தை தாண்டிய உறவு, கொலை குற்றச்சாட்டு என கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் என்பதைத்தான் அவர் குறித்த செய்திகளை பார்க்கும்போது தோன்றுகிறது. புகார் கொடுத்த ஜோளி ஜோசப்பின் நாத்தனார், மச்சின் மற்றும் மகன் உள்ளிட்டோரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த ஆவணப்படம் நகர்வதால், ஆவணப்படத்தில் வரும் காட்சிகளே பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகின்றன.

சந்தேகம் 1:
ஜோளி ஜோசப்பும் ராய் தாமஸும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்கிறார்கள். ஜோளி ஜோசப் ஹீல்ஸ் செருப்பு அணிவதைக்கூட ஒரு கொலை குற்றம்போல் ஆவணப்படத்தில், விமர்சித்திருக்கிறார் நாத்தனார் ரெஞ்சி. அதுமட்டுமல்ல, தங்களுடைய குடும்பத்திற்கு வாழவந்தபிறகுதான், ஜோளி ஜோசப்புக்கு இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தும், பெருமையும் வந்துவிட்டதாக பெருமை அடித்துக்கொள்கிறார்.

மாமியார் அன்னம்மா இறந்தவுடன் ஜோளி ஜோசப் அந்த குடும்பத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார் நாத்தனார் ரெஞ்சி. அந்த வீட்டின் மூத்த மருமகளான ஜோளி ஜோசப் அந்தக் குடும்பத்தை பொறுப்பு எடுத்து வழி நடத்தாமல், மாமியார் இறப்புக்கு பிறகு சிறு பெண்ணான நாத்தனார் ரெஞ்சியையா தலைமை தாங்க வைக்கமுடியும்?

சந்தாகம் 2: திருமணத்துக்குப்பிறகு ஒரு பெண் வேலைக்குச் செல்வது, செல்லாதது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் அல்லது கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும் விஷயம். அப்படியிருக்க, திருமணம் ஆனதிலிருந்தே மாமியார் அன்னம்மா வேலைக்கு போகச் சொல்லி, தொடர்ந்து ஜோளி ஜோசப்பை டார்ச்சர் செய்துள்ளார். அதுமட்டுமல்ல, ஜோளி ஜோசப், குழந்தை பெற்று தாயான பிறகும்கூட “குழந்தையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… நீ வேலைக்கு போ” என்று அழுத்தம் கொடுப்பது எவ்வளவு பெரிய குடும்ப வன்முறை?

சந்தேகம் 3: ஜோளி ஜோசப்பின் மகனே தாயை குற்றம்சாட்டுகிறார், அப்படியென்றால் அவர் குற்றவாளிதானே என்பதுபோல் இந்த ஆவணப்படம் சித்தரிக்கிறது. “உங்களுடைய அம்மா, உங்கள் மீது பாசம் வைக்காமல் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துவிட்டாள், அவள் ஒரு கொலைகாரி, உங்கள் அப்பாவையே விஷம் வைத்து கொன்றவள்” என்றெல்லாம் நாத்தனார் சொன்னால், எந்த பிள்ளைகள்தான் தாய் மீது வெறுப்பு ஆகமாட்டார்கள்? அம்மா சிறையில் உள்ளார். நாத்தனார்தான் வளர்த்துவருகிறார். இந்த நிலையில் அம்மாவுக்கு எதிராக எப்படி பேசுவார்?

சந்தேகம் 4:
ஜோளி ஜோசப் எம்.காம் படித்ததாக கூறியது பொய்; அவரது அப்பா தாமஸ் வீட்டிற்கு வந்துவிட்டால் மாமியார் அன்னம்மா விசாரித்து உண்மையை கண்டுபிடித்துவிடுவார். அதனால், மாமியாரின் உணவில் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டார் என்பதுதான் முதல் மரணத்திற்கு அவர் மீதான குற்றச்சாட்டு. திருமணத்திற்கு முன்பே ஜோளி ஜோசப்பின் கல்வித்தகுதி குறித்து பெற்றோரிடம் விசாரிக்கவில்லையா? காதல் திருமணமாக இருந்தாலும் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணம்தானே? ஜோளி ஜோசப் குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை, ஒருமுறைகூட அவரது அப்பா இந்த வீட்டிற்கு வந்திருக்கமாட்டாரா? அப்போதெல்லாம், மாமியாருக்கு சந்தேகம் ஏற்படவில்லையா? அப்போது சொல்லியிருக்கமாட்டாரா? சரி, மாமியாருக்கு விஷம் கொடுத்துதான் கொலை செய்தார் என்பதற்கு எந்த போஸ்மார்ட்டம் உள்ளிட்ட எந்த ஆதாரமும் இல்லாதபோது, அது வெறும் குற்றச்சாட்டுதானே?

சந்தேகம் 5: பிறகு, என்.ஐ.டியில் வேலை செய்ததாக ஜோளி ஜோசப் பொய் சொல்லிவிட்டார். அதற்காக, போலி ஐடி கார்டுகள் மற்றும் போலி கல்வி சான்றிதழ்களை அவர் தயாரித்து வைத்திருந்தார், என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டில் சம்பளமே கொடுக்காமல் ஒரு மிகப்பெரிய இடத்தில் வேலை செய்வதாக ஒரு பெண்ணால் ஏமாற்றிக்கொண்டே இருந்திருக்கமுடியுமா?

சந்தேகம் 6: இரண்டாவது கொலையாக சொல்லப்படும் மாமனார், ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் இருந்த சூழலில், மயங்கி விழுந்துதான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால், ஜோளி ஜோசப் அவருக்கு மஷ்ரூம் மாத்திரையில் சயனைடு கொடுத்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததும் கார் சாவியை தேடுவதுபோல, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் நாத்தனார் ரெஞ்சி. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படாததால் அவர் சயனைடு மாத்திரை சாப்பிட்டதற்கு எந்த ஆதாரமும் சொல்லப்படாதபோது அதையும் கொலை என்று ஜோளி ஜோசப் மீது எப்படி குற்றம்சாட்டமுடியும்? அவரே, மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் மீது சந்தேகமே வந்திருக்காதே?

சந்தேகம் 7: ஜாலியின் கணவர் ராய் தாமஸின் மரணத்தின்போதுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சயனைடு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார் என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அப்போதே, புகார் கொடுத்த நாத்தனார் ரெஞ்சிக்கு ஜோளி ஜோசப் மீது ஏன் சந்தேகம் ஏற்படவில்லை. அப்போதே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை படிக்கவில்லையா?

சந்தேகம் 8: வீட்டில் நடந்த ஒரு விழாவில் அத்தை(ரெஞ்சி) உணவு ஊட்டும்போது, ஷாஜுவின் குழந்தை திடீரென இறந்துவிடுகிறது. இந்த குழந்தையின் இறப்புக்கும் ஜோளி ஜோசப் தான் காரணம் என்கிறார்கள். அதற்குப்பிறகு, அந்த குழந்தையின் தாய் சிலியும் இறந்துபோகிறார். அதற்கும் காரணம், ஜோளி ஜோசப் சொன்ன மஷ்ரும் மாத்திரையில் சயனைடு கலக்கப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டுகிறார் நாத்தனார் ரெஞ்சி. ஆனால், அவரது மர்ம மரணத்துக்கு போஸ்ட் மார்ட்டம் வேண்டாம் என அவரது கணவர் ஷாஜு தடுத்துவிடுகிறார். குழந்தைக்கும் அவரது மனைவிக்கும் ஏன் போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை? ஷாஜுவை ஏன் இந்த வழக்கில் குற்றவாளி ஆக்கவில்லை? எல்லா கொலைகளுக்கும் ஜோளி ஜோசப் ஒருவரே காரணம் என அழுத்தம் திருத்தமாக நாத்தனார் ரெஞ்சியும் காவல்துறையும் குற்றம்சாட்டுவது ஏன்?

சந்தேகம் 9: முக்கியமாக ஆறு கொலைகள் செய்யும்வரை ஜோளி ஜோசப் மீது நாத்தனார் ரெஞ்சிக்கு சந்தேகம் வரவில்லை. எப்போது வருகிறது? ஜோளி ஜோசப் இரண்டாவது திருமணம் செய்தபிறகே வந்திருக்கிறது என்றால் மறுமணம் செய்துகொள்ளும் பெண்கள் மீது, மணமகன் வீட்டாருக்கு ஏற்படும் வழக்கமான வெறுப்புதானே இதற்கெல்லாம் காரணம்?

சந்தேகம் 10 : ஷாஜுவை இரண்டாவது திருமணம் செய்யத்தான் அவரது குழந்தையையும் மனைவியையும் கொன்றார் என்றால், திருமணத்துக்கு பிறகுகூட கொன்றிருக்கலாமே? அதே குழந்தையின் சகோதரனை ஜோளி ஜோசப் கொலை செய்யவில்லையே?
இப்படி, ஜோளி ஜோசப் வழக்கில் விடை தெரியாத பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

ஒருவரை குற்றவாளி ஆக்க வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே போதாது. ஆதாரங்கள், கண்ணால் பார்த்த சாட்சிகள், தடயவியல்துறை நிபுணர்களின் ரிப்போர்ட்கள் என ஆதாரங்களை காவல்துறை சமர்ப்பிக்கவேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது ஜோளி ஜோசப் உண்மையாகவே செய்த குற்றங்களிலிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது. இது, ஜோளி ஜோசப் வழக்கில் மட்டுமல்ல ஒவ்வொரு வழக்கிலும் புலனாய்வு மற்றும் ஆவணங்கள் திரட்டுவதில் காவல்துறை கவனமாக செயல்படவேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.

-வெற்றி வேந்தன்