அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில்பாலாஜியின் அரசியல் உதவியாளராக இருந்த கோகுல் என்பவருக்குச் சொந்தமான 2 வீடுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் நேற்று நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பலரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.