சாலை, கட்டிடம், பேருந்து நிலையங்களுக்கு பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கு, பெயரிடுவதில் பிரச்சனை எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இக்கட்டிடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டத்தின்படி, அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துகளுக்கு பெயரிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துகளுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகள், மன்றங்களில் தீர்மானங்களாக இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், பேருந்து நிலையங்கள், கட்டிடங்களுக்கு, பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.