மணிமங்கலம், படப்பை பகுதிகளில் தனியார் நிறுவன ராட்சத விளம்பர பலகைகள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

154
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த கரசங்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில், ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், சுமார் 40 அடி உயரத்தில் விளம்பர பேனர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, ராட்சத பேனர் அடியோடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருகில் இருந்த மின்கம்பங்கள் உடைந்து, மின் ஒயர்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டதால், கரசங்கால், கீழ்படப்பை, மண்ணிவாக்கம், அதனூர்  உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

பலத்த காற்றின் காரணமாக முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத விளம்பர பேனரை அகற்றி மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.