இனி குழந்தை பெத்துக்க கர்ப்பப்பையே தேவை இல்ல!

68
Advertisement

மாறி வரும் வாழ்க்கை முறை சூழல், தாமதமான திருமணங்கள் என குழந்தை பிறப்பை சிக்கலாக்க பல காரணங்கள் உள்ளன.

இதன் விளைவாக செயற்கை கருத்தரிப்பு மையங்களை மக்கள் நாடி செல்லும் நிலையில், அங்கும் உறுதியான தீர்வு கிடைக்காமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இது போன்ற குழந்தை பேறு பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது தான் EctoLife என்ற உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி நிறுவனம்.

Advertisement

பெர்லினை மையமாக கொண்ட இந்நிறுவனத்தின் மூளையாக செயல்படுபவர், ஆராய்ச்சியாளரும் உயிரியல் தொழில்நுட்பவியலாளருமான ஹஷேம் அல்-கைலி ஆவார். தாயின் வயிற்றுக்குள் உள்ள கருப்பையின் தன்மை, தட்பவெப்ப நிலை அப்படியே வடிவமைக்கப்பட்டு குழந்தையின் உடல்நலனை உடனுக்குடன் கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டு செயற்கை கர்ப்பபைகள் இயங்கும்.

ஒரு வருடத்திற்கு முப்பதாயிரம் குழந்தைகள் வரை ஆய்வகத்தில் வளர்த்தெடுக்க முடியும் என Ectolife தனது விளம்பர வீடியோவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வகையில் உருவாக்கப்படும் குழந்தைகளின் தலைமுடி நிறம், சரும நிறம், கண்களின் நிறம், உடல் சக்தி, உயரம் ஆகியவற்றை முன்னரே தீர்மானிக்க முடியும் என்றும் மரபு வழி சார்ந்த நோய்களிடம் இருந்து  பாதுகாக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்முறை நடைமுறைக்கு வந்தால் மலட்டுத்தன்மையால் குழந்தை பெற முடியாதவர்கள், சிகிச்சை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்கள் மட்டும் இல்லாமல் பிரசவ வலி மற்றும் கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க நினைப்பவர்களுக்கும் தீர்வாக அமையும்.

ஆனால், தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் மனித கருவை 14 நாட்களுக்கு மேல் ஆய்வு செய்ய தடை உள்ளது. அதனால், இப்போதைக்கு இந்த ஆய்வு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து, இந்த ஆராய்ச்சியில் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என  ஹஷேம் அல்-கைலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.