பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் – திரௌபதி முர்மு அறிவிப்பு

2232

குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டததில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

1958 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி  பிறந்த ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இருந்துள்ளார்.

இவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராகவும், பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரௌபதி முர்மு தனது வாழ்க்கையை சமுதாய சேவைக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அர்ப்பணித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறந்த நிர்வாக அனுபவத்தை கொண்ட திரௌபதி முர்மு, சிறந்த ஆளுநராக பதவி வகித்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெறுவார் என்றும், நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக அவர் திகழ்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.