கொரேனா தொற்றிய மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்!

338
Advertisement

உலகில் எங்கும் நடைபெறாத அதிசய நிகழ்வொன்றை
அரங்கேற்றியிருக்கிறார் அசாம் மாநிலப் பெண்ணனான
நிகாரிகா.

திருமணமான சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம்
சென்று மாமனார், மாமியாரைத் தவிக்கவிடும் பெண்கள்
மத்தியில் அனைத்து மருமகள்களுக்கும் முன்னுதாரணமாகத்
திகழ்ந்து தாயுமானவர் ஆக உயர்ந்திருக்கிறார் இந்த அசாம் நங்கை.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்

குடும்பத்துக்குப் பெருமை சேர்க்காத பெண்ணின் வாழ்க்கை
எத்தனை பெருமை உடையதாயினும் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.

தற்காத்துத் தற்கொண்டாள் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

தன்னைக் காத்துக்கொண்டு தன் கணவனையும் காத்து சோர்வு
இல்லாதவளாய் இயங்குபவள் பெண்.

கொரோனா நல் மனிதர்களை அடையாளம் உலகுக்கு
அடையாளம் காட்டியுள்ளது. தன் தாய்க்கு கொரோனா
தொற்றிவிட்டது என்பது தெரிந்ததும் மகளே வீட்டுக்குள்
விடாமல் தெருவில் விட்டதும், இரண்டு மகன்கள் இருந்தும்
கொரோனா தொற்றிய தாயை வீட்டுக்குள் சேர்க்காமல்
காப்பகத்துக்கு அனுப்பிய கொடுந்துயரமும் நிகழ்ந்தது.

அதேவேளையில், மருமகளல்ல மரு மகள் என்பதற்கேற்ப
நடந்து இல்லற வாழ்வுக்கு சரியான அர்த்தத்தை உணர்த்தி
இருக்கிறார் அசாம் மங்கை நிகாரிகா.

அசாம் மாநிலம், ராஹா நகரில் உள்ள பாட்டிசுவான்
என்னும் பகுதியில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ்.
78 வயதான இவர் தன் மகனோடு வசித்து வருகிறார்.
இவரது மகன் தாஸ் வேலை நிமித்தமாக வெளியூர்
சென்றுவிட, இவரது மனைவி நிகாரிகா தன் மாமனாரைத்
தன் தந்தையைப்போல் பராமரித்து வந்துள்ளார்.

குடும்பத் தலைவி என்பதற்கேற்ப தன்னிகரில்லாமல்
செயல்பட்டு வந்த நிகாரிகாவின் மனிதப் பண்பை உலகுக்கு
எடுத்துக்காட்ட விரும்பியதுபோலும் கொரோனா. ஆம். சில
நாட்களுக்கு முன்பு நிகாரிகாவின் மாமனாரான துலேஷ்வர்
தாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கணவரோ வெளியூரிலிருக்க, உதவிக்கு எவரும் வராத
இக்கட்டான நிலை.

கணப்பொழுது தாமதித்தாலும் தன் தந்தைக்கு நிகரான
மாமனார் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமே என்று
நிகாரிகா பரிதவித்தாலும் சமயோசிதமாக செயல்படத்
தொடங்கினார்.

தன் மாமனாரிடமிருந்து தனக்கு கொரோனா
பரவும் வாய்ப்பு இருப்பதை அவர் அறிந்திருந்தாலும் அதைப்
பற்றி அணுவளவும் அச்சப்படாமல் தன் மாமனாரைத் தன்
குழந்தையைப்போல நினைத்து அவரைத் தூக்கி முதுகில்
வைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்கக் தொடங்கினார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வந்த ஒரு ஆட்டோவை
நிறுத்தி, மாமனாரை அதில் உட்கார வைத்து, தானும் உடன்சென்று
அவரை மருத்துவ மனைக்கு கொண்டுசென்றுள்ளார் இந்தப்
புண்ணியவதி.

இதற்கிடையே மாமனாரை முதுகில் சுமந்து வந்ததால்,
நிகாரிகாவுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது.
நிகாரிவை அவரது வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு
மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனாலும், தனக்கு கொரோனா தொற்றியதைவிட தன்
மாமனாரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து
சிகிச்சை கிடைக்கச் செய்த பரம திருப்தியில் உள்ளார் இந்த
மருமகள் நிகாரிகா.

நிகாரிகா எனில் நிகரற்றப் பெண் எனப் புது அர்த்தம்
கற்பித்திருக்கிறார். நிகரற்ற இந்த மருமகளைப் பல்வேறு
தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

நிகாரிகா என்பதற்கு வியப்பான தோற்றம் என்றும் ஒரு
பொருளுண்டு- தன் செயலால் உலகே வியந்து பார்க்கும்படி
செய்துள்ளார் இந்த நங்கை.

பெண்கள் அனைவரையும் மங்கை எனச் சிறப்பாகத் தமிழ்
இலக்கியங்கள் குறிப்பிடும். சிறப்பான பெண்களை நங்கை என
அழைக்கும். நிகாரிகா நங்கையாக உயர்ந்திருக்கிறார்.

நிகாரிகா என்பதற்கு விண்மீன் என்றும் ஒரு பொருளுண்டு.
தன் செயற்கரிய இந்தச் செயலால் விண்ணில் உலவி ஒளிவீசும்
விண்மீனாக உயர்ந்திருக்கிறார் இந்த நிகாரிகா.