டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்றும், பாஜக அதிமுக கூட்டணி தொடர்கிறது எனவும் கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தகராறு இல்லை என்றும், அந்தந்த கட்சிகள் அவரவர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறார் எனவும் தெரிவித்தார். துரோகம் இழைத்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறிய பழனிசாமி, ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் அதிமுகவில் இணையலாம் என கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாராஜன் தொடர்பான ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கில் குற்றவாளிகளை அதிமுக அரசு கைது செய்தது எனவும் கூறினார்.