விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட நபர்களை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு காரணம், திமுக சேர்ந்தவர்களே கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபட்டது தான். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலத்தில் உள்ள ஒருவர், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த தவறியதால் தான் 18 உயிர்களை நாம் இழந்துள்ளோம். போலி மதுபான விற்பனை செய்தவர் திமுகவின் சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் சகோதரர் அமாவாசை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிய வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,600க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஏராளமான கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தது. அப்படியெனில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அரசுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதற்கெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.