சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த ஒரு மாதமாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சென்னை அண்ணாசாலையில், 18 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெறப்பட்ட ஊதியத்தில் இருந்து 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், அரசுக்கு, 527 கோவடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர், இந்த ஊதிய உயர்வால், 75 ஆயிரத்து 978 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.