டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?

1060
டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS -தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர்-உளவுப்பிரிவு

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் உண்மை நிலவரங்கள் என்ன ?

ஆடைகளைப்பார்த்து அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் எனக்கூறும் ஒரு கட்சியின் மாநிலத்தலைவரான அண்ணாமலை,

தமிழக உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது முன்வைத்திருக்கும் குற்றசாட்டு, ஏன் அந்த அதிகாரியின் பெயர் ஏற்படுத்தும் எரிச்சலாக இருக்கக்கூடாது

யோசித்துப்பாருங்கள் !

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் 2020 அறிக்கையின் படி பாஸ்போர்ட்  தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும் மாநிலம் மேற்கு வங்காளம்,, இரண்டாம் இடத்தில் இருப்பது  பிஜேபி ஆளும் கர்நாடகா..

NCRB 2020 அறிக்கையின்படி பாஸ்போர்ட் தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும் மாநிலம் மேற்கு வங்காளம்,, இரண்டாம் இடத்தில் இருப்பது   
பிஜேபி ஆளும் கர்நாடகா

சரி,

ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்துள்ள புகாரில்,மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கை குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வழக்கு 11-02-21-ம் தேதியன்று முடித்துவைக்கப்பட்ட வழக்கு.

முருகேச கணேசன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில் 7-வது எதிர்மனுதாரராக உள்நாட்டு பாதுகாப்புப்பிரிவு IG  மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அடுத்த 15 தினங்களில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம்,மீண்டும் கொரோனா தாக்கம்,ஆக்சிஜன் பற்றாக்குறை என பிரச்சனைகள் இருந்ததால் விசாரணை தாமதமாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

வக்காலத்து வாங்குவதற்காவோ,அல்லது யாருக்கும் ஆதரவாகவோ இதை குறிப்பிடவில்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படாமல் போனதற்கு இதை காரணமாக சொல்லி நியாயப்படுத்தவும் நினைக்கவில்லை.

நீதிமன்றத்தால் மூன்று மாதத்தில் விசாரித்து அறிக்கை சமர்பிக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டவர்  உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் IG -ன் ஈஸ்வரமூர்த்தி.

அதே நேரம்

சம்பந்தப்பட்ட  வழக்கு WP-2563/2021 மற்றும் WP-2112/2021 ஆகிய இரண்டு வழக்கிலும் எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் அவருக்கு எதிரான எந்த தரவுகளும்,ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது

ஆனால்,அண்ணாமலை இந்த வழக்கில் ஏன் தமிழக உளவுத்துறை தலைவரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தீவிரமாக குறிவைக்கிறார்   என்பதை கவனிக்க வேண்டும்.

உண்மையில் கவனிக்கவேண்டும் என்ற வார்த்தைகள் கூட சரியானது அல்ல.சந்தேகப்படவேண்டும்.

2011-ம் ஆண்டு முதல்

இலங்கை தமிழர்கள் போலி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 148

அதில் மிக அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது சென்னையில் தான்.மொத்தம் 91 வழக்குகள்

அதற்கு அடுத்த இரண்டாமிடத்தில் மதுரை மாவட்டம் இருக்கிறது. கவனிக்கவும்.. மதுரை நகரமல்ல !

21 வழக்குகள்.

மூன்றாமிடத்தில்,திருச்சி நகரம் இருக்கிறது. 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

2011-ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்கள் பெற்ற போலி பாஸ்போர்ட் தொடர்பாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பட்டியல்

நன்றாக கவனியுங்கள் மதுரை நகரத்தில் 2011-ம் ஆண்டுக்கு  பிறகு

ஒரே ஒரு வழக்கு மட்டுமே இலங்கை தமிழர்கள் போலி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால்,பிஜேபி தலைவர் அண்ணாமலை புகார் கொடுப்பது யார் மீது பாருங்கள் மதுரையில் காவல் ஆணையராக பணியாற்றினார் என்பதற்காக தற்போதைய உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட் சன் மீது.

எப்படி ?

இது தேசத்தின் மீதான பாதுகாப்பு குறித்த அக்கறையின் வெளிப்பாடா ? இல்லை “டேவிட்சன்” என்ற பெயர் பிடிக்கவில்லையா ?

டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS -தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர்-உளவுப்பிரிவு

சரி,, 2001-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை தமிழக Q Branch

பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் படி பதிவு செய்துள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 48.

இந்த வழக்குகளில் 214 இலங்கை தமிழர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்

அதில், புலன் விசாரணையில் இருக்கும் வழக்குகள் -13

நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகள் -15

முடிந்த வழக்குகள் -20

2001-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை

16 மாவட்டங்களில் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

214 இலங்கை தமிழர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஆனால்,

மதுரையில் காவல் ஆணையராக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றிய காலத்தில் தான் நாட்டிற்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை பிஜேபி தலைவர் அண்ணாமலை ஏற்படுத்துவது அவரது பதவிக்கும் அழகல்ல.

அவர் படித்துள்ள படிப்புக்கும் நியாயமல்ல

தமிழக Q பிரிவு CID போலீசார் 2001-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள பாஸ்போர்ட் தொடர்பான வழக்குகளின் பட்டியல்

சரி…

கடவுச்சீட்டு (Passport) பெறுவதில் காவல் துறையின் பங்கு என்னவென்று பார்க்கலாமா !

கடவுச்சீட்டு பெறுபவர் முதலில் தங்கள் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் (மத்திய அரசு அலுவலகம்) இணையவழி மூலம் விண்ணப்பிக்கின்றனர்.

பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பதாரர் மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு (மத்திய அரசு அலுவலகம்) நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு அவரது புகைப்படம் எடுக்கப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அப்படிவத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. 

பின்னர், விண்ணப்பதாரர் வசித்து வரும் பகுதிக்குரிய மாவட்ட குற்றப் பிரிவு ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கும், மாநகரைப் பொறுத்தவரை அந்தந்த நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர் மற்றும் ஆய்வாளர் மூலமும்,  விண்ணப்பதாரரின் இருப்பிடம், விண்ணப்பதாரர் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு,

மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் மூலமாகவும், மாநகரைப் பொறுத்தவரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு AC மூலமாகவும் மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மாநகரைப் பொறுத்தவரை மூன்று நாட்களிலும், மாவட்டங்களில் இரண்டு வாரங்களிலும் இருப்பிடம் மற்றும் வழக்குகள் குறித்த சரிபார்ப்புகள் முடித்து கடவுச் சீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதனையடுத்து, கடவுச்சீட்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு, விண்ணப்பதாரர் குறிப்பிட்ட முகவரியில் இல்லையெனில் அவை மீண்டும் கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

விலாசம் சரிபார்ப்பதலோ, குற்றவழக்குகள் குறித்து சரிபார்ப்பதோ காவல் ஆணையரோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் பணியோ கிடையாது

ஆனால்,, தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை,,

மதுரையில் நடந்துள்ள போலி பாஸ்போர்ட் தொடர்பான மொத்த தவறுக்கும் டேவிட்சன் தான் காரணம் என்பது போல குற்றம் சுமத்துவது ஏன் உள்நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடாது ?

காவல்துறை ஆவணங்கள் சரிபார்ப்பதற்கு முன்னதாக பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் வழங்கமுடியுமா முடியாதா என பார்க்கலாம்..

2007-ம் ஆண்டில் -43044

2008-ம் ஆண்டில் -55968

2009-ம் ஆண்டில் -44873

2010-ம் ஆண்டில் -25742 பாஸ்போர்ட்களை  தட்கல் முறையில் சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வழங்கியுள்ளது.

இதில்,

2007-ம் ஆண்டில் -1087

2008-ம் ஆண்டில் -1795

2009-ம் ஆண்டில் -1788

2010-ம் ஆண்டில் -526

தட்கல் முறையில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்களுக்கு காவல்துறை தரப்பில் எதிர்மறையான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், காவல்துறை விசாரணை அறிக்கை அனுப்புவதற்கு முன்பாகவே பாஸ்போர்ட் அதிகாரி கடவுசீட்டை விநியோகித்துவிட்டார். தமிழகத்தில் அதுவும் சென்னையில் மட்டுமே நடந்த கூத்து இது.

2010-ம் ஆண்டில் காவல்துறை விசாரணை அறிக்கை கொடுப்பதற்கு முன்பே பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டதற்கான RTI ஆதாரம்

The Passports Act 1967 – படி 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டுள்ளதாக 1625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக NCRB அறிக்கை கூறுகிறது

1980 களில் இலங்கையிலிருந்து வெளியேறத் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் இந்தியக் கடவுச்சீட்டுகளைப் பெறும் குற்றம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது

அகதிகளாக வந்து இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிய பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.

இதேபோல பல்வேறு மாநிலங்களிலும் இந்த குற்றம் நடந்து வருகிறது.

தமிழகத்தில்,2001- முதல் Q பிரிவு வழக்கு பதிவு செய்த 48 வழக்குகளில் எந்தவொரு காவல் ஆணையரும் அல்லது காவல் கண்காணிப்பாளரையும் வழக்கில் சேர்க்கவில்லை.

அவர்கள் மீது குற்றச்சாட்டும் எழவில்லை.விமர்சனமும் முன்வைக்கப்படவில்லை.

அதே நேரம்,புலன் விசாரணை நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாக அரசு அறிக்கை விடுவது மிகவும் அரிதானது.

ஆனாலும் பிஜேபி தலைவர் அண்ணாமலையின் தொடர்ச்சியான குற்றச்சாட்டால் தமிழக அரசு விளக்க அறிக்கை ஒன்றை 23-07-22-தேதி வெளியிட்டுள்ளது.

அதில்,அண்ணாமலை இந்த புகாரை எழுப்புவதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

பாஸ்போர்ட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது

மதுரையில் நடந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் விளக்க அறிக்கை

2019-2020 காலக்கட்டத்தில் போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக CBI  FIR;RC 2292021A 003/2021 வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

08/07/21 ம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இப்போது வரை முழுமையாக விசாரிக்கப்படவில்லை.

குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

08-07-21-ம் தேதி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக CBI பதிவு செய்த FIR

தமிழகத்தின் Q பிரிவு முறையாக விசாரிக்கவில்லை என்ற கேட்கும் அண்ணாமலை ஏன் சிபிஐ இன்னும் விசாரித்து முடிக்கவில்லை என்று கேட்கமாட்டார்.

ஏன் என்றால் அது மத்திய அரசு விவகாரம்.

நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட நடவடிக்கையில் கீழ்நிலை அதிகாரிகளின் செய்த தவறை மேற்பார்வையிட டேவிட்சன் தேவாசீர்வாதம் தவறிவிட்டார்,இதை போலி பாஸ்போர்ட் ஆவண மோசடி என எளிதாக  கடந்து போய்விடமுடியாது என்று கூறுகிறார் பிஜெபித்தலைவர் அண்ணாமலை.

நியாயம் தான்..

ஆனால்,

டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP மட்டும் குறிவைக்கப்பட என்ன காரணம் ?

ஆடைகளைப்பார்த்து அடையாளம் கண்டு கொள்ளும் கட்சியின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் பெயரைப்பார்த்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் அரசியல் செய்கிறார் என்றால் !

அது இந்த நாட்டிற்கு நிச்சயம் நல்லதல்ல !