அவ்வளவு ஆபத்தானதா அந்த 7 புத்தகங்கள்? தடை செய்யும் உலக நாடுகள்!

234
Advertisement

நல்ல இலக்கியம் மனதை பண்படுத்தி அறிவை வளர்க்கும் என்பது அனைவரும் அறிந்த மற்றும் ஒப்புக்கொள்ளக் கூடிய கருத்து ஆகும்.

ஆனால், காலந்தொட்டே வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய, சரித்திரங்களை புரட்டிப்போடக் கூடிய புத்தகங்களின்  சக்தியை அறிந்தே, உலக நாடுகள் பல்வேறு புத்தகங்களை தடை செய்துள்ளன.

1945ஆம் ஆண்டு, George Orwell, Animal Farm என்னும் நாவலில் ஒருங்கிணைந்து வாழும் விலங்குகளின் கதை மூலம் கம்யூனிசக் கொள்கையை மிக காட்டமாக நையாண்டி செய்திருப்பார். சோவியட் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இப்புத்தகம், இன்றும் கியூபா மற்றும் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி ஐக்கிய அரபு அமீரகத்திலும் Animal Farm தடை செய்யப்பட்டுள்ளது.

சர்வாதிகாரப் போக்கையும் எதேர்சை அதிகாரத்தையும் தோலுரித்து காட்டிய George Orwellஇன் 1984 என்ற நாவலும் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியட் ஒன்றியத்தில் 1990ஆம் ஆண்டு வரை தடை செய்யப்பட்டு இருந்தது.

1988ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதிய ‘Satanic Verses’ என்ற நாவல், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. மதப்பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து, Satanic Versesஇன் தணிக்கை மற்றும் தடை உலக முழுவதும் விவாதப்பொருளாக மாறியது.

இதையடுத்து இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது. அப்போதைய ஈரானின் தலைவரான அயோடொல்லா ருஹோலா கோமேய்னி, ருஷ்டி மீது விதித்த Fatwa அவர் மீது பல கொலை முயற்சிகள் நடக்க காரணமாக அமைந்தது. இதனாலேயே, ருஷ்டி பல வருடமாக பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்தார். எனினும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கொலைவெறி தாக்குதலில் மீள முடியாத வாழ்நாள் பாதிப்புக்கு ஆளானார் ருஷ்டி.

1865ஆம் ஆண்டு வெளியான Lewis Carrollஇன்  ‘Alice’s Adventures in Wonderland’ குழந்தைகளுக்கான கதை என்ற போர்வையில் இரட்டை அர்த்த கதைக்களத்தை கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அமரிக்க பள்ளிகளில் பாடப்புத்தகமாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மிருகங்கள் பேசுவது போல சித்தரிக்கப்பட்ட கதை என்பதால் சீன அரசும் இந்த புத்தகத்தை தடை செய்தது.

ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர், ‘என்னுடைய போராட்டங்கள்’ என பொருள்படும் ‘Mein Kampf’ என்ற தனது சுயசரிதையை 1925ஆம் ஆண்டு வெளியிட்டார். யூத எதிர்ப்பு கருத்துக்கள் மற்றும் ஹோலோகாஸ்ட் படுகொலையை நியாயப்படுத்தி எழுதப்பட்ட இந்த நூலை இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜெர்மன் அரசு தடை செய்திருந்தது. 2016க்கு பிறகு அதிக திருத்தங்கள் செய்யப்பட்ட புத்தகமே புழக்கத்தில் உள்ளது.

Erika Leonard எழுதிய Fifty Shades of Grey கதைத் தொடர், ஆபாச உணர்வை வெளிப்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமெரிக்காவின் மூன்று மாநிலங்களிலும் மலேசியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற காரணத்திற்காகவே 1920ஆம் ஆண்டு வெளிவந்த James Joyce எழுதிய ‘Ulysses’ 1933ஆம் ஆண்டு தான் தடை நீங்கி புழக்கத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.