பிரான்க் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பல யூடியூப் சேனல்கள் பிரான்க் ஷோவே தனியாக நடத்தி வருகிறார்கள். சில பிரான்க்ஸ் வேடிக்கையாக இருந்தாலும், சில பிரான்க்குகள் புலி வருது கதையாக மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதே போல, அமெரிக்க விமானத்தில் பத்து வயது சிறுவன் செய்த பிரான்க், விமானம் கடத்தப்படுகிறதோ என்ற அச்சத்தை விமானப் பயணிகள் மனதில் ஏற்படுத்தியது.
சியாட்டிலில் இருந்து ஆர்லாண்டோவுக்குச் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. 10 வயது சிறுவன் செய்த வேடிக்கையான ஒரு விஷயம் விமானம் கடத்தப்பட்டுவிட்டது என்ற அச்சத்தை பயணிகள் மட்டும் இல்லாமல் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மார்ச் 6 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சுறுத்தக்கூடிய சந்தேகம் ஏற்பட்டதால் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்பும் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு டாக்ஸி வேயில் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், விமானம் கடத்தப்படவில்லை அல்லது அதற்கான அச்சுறுத்தல்கள் ஏதுமில்லை என்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமின்றி விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சுறுத்தலுக்கான அலார்ம் எப்படி அடித்தது என்பதைப் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த சிறுவன் செய்த பிரான்க்கை கண்டறிந்தனர்.
விமானத்தில் பயணித்த 10 வயது சிறுவன் சக பயணி ஒருவருக்கு ஏர்டிராப் மூலமாக ஒரு செய்தி அனுப்பியிருக்கிறான். இந்த செயலை கடத்தல் எச்சரிக்கையாக விமானம் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக குறியீடு செய்தி வந்தது என்று தெரிவித்தனர் ஆனால், அதே நேரத்தில் அந்த விமானத்தின் பைலட் அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை என்றும் செய்திகள் கூறின. விமானம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது பயணிகள் மத்தியில் எந்தவித சலசலப்பும் சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கைகளும் காணப்படவில்லை.
விமானம் தரையிறங்கிய பின்னும் பயணிகள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. விமானம் இறங்கிய 1 மணி நேரத்திற்கு பிறகு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அச்சுறுத்தல் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டு கடத்தல் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு அனைவரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். முதலில் அந்த சிறுவனும் அவரின் தாயாரும் போலீசாரின் உதவியோடு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சிறுவனின் செயலுக்கு தாயார் அனைவரிடமும் பணிவாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பின்னர், மற்ற பயணிகள் அனைவரும் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.