வேலை வாங்கித் தருவதாக காவல்துறை உதவி ஆய்வாளர்

275
Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரிடம் காவல்நிலையத்தில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளாகியது. அந்த வீடியோவில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர், காவல்துறையில் வேலை வாங்கித் தருவதற்காக பணம் பெற்றதாகவும், ஆனால் இதுவரை அவர் வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் இருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 580 காவலர்களை தேர்வு செய்து அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், தற்போது 500 ஊர்க்காவல் படையினருக்கான தேர்வு கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்தான், வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக காவல் ஆய்வாளர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் விசாரிக்க ஆரம்பித்தபோது…

அந்த வீடியோவில் இருப்பது கிழக்குப் பகுதி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் என்பது தெரிய வந்தது.

மேலும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன், காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி உறவினர்கள் உட்பட பலரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை பலமுறை கேட்டும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இதனால் பணம் கொடுத்த உறவினர்கள் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் முருகனிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், தான் வாங்கிய பணத்தை காவல் ஆய்வாளர் சத்திய நாராயணனிடம் கொடுத்ததாகவும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தான், நேரு வீதியில் அமைந்துள்ள பெரிய கடை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளஎ முருகனை முற்றுகையிட்டு ”கொடுத்த பணத்தை திருப்பி தர வேண்டும்” என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் தங்களிடம் மட்டும் 4 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி வந்து கேட்டால் தரமறுக்கின்றார் என்றும், இதுபோன்று ஏழு நபர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருவர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், தலைமை செயலர் அலுவலகம், டிஜிபி தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியில், பரபரப்பாக இயங்கும் காவல் நிலையத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. இதுவரை பணத்தை வாங்கிய உதவி ஆய்வாளர் முருகன், ஆய்வாளரிடம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் இருவர் மீதும் எடுக்காமல் காவல்துறையினரும் அரசும் மறைத்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே, அரசு வேலைக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்கப்படுவதாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கக்கூடிய நிலையில், தற்போது காவல்துறையில் வேலை வாங்கித் தருவதற்காக பணம் வாங்கிக் கொண்டு, வேலையை வாங்கித் தராமல் பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்து இப்படி மாட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், அரசு வேலைக்கு பணம் கொடுப்பதே தவறுதானே? நேர்மையான முறையில் தேர்வு எழுதி அரசு பணிக்கு வந்தால்தான் அவர்களும் நேர்மையாக இருப்பார்கள், இல்லை என்றால் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களிடம் நியாயத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும் என்ற இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

-ஜெயக்குமார்