தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்க துறையினர் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
நெஞ்சுவலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.