நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம் என ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனி சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியை பெறலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
165 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான நடைமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.