ஒற்றைக்காலுடன் 68 வயதில் விடாமுயற்சிக்கு சொந்தக்காரர்

Advertisement

மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இன்னலையும், பிரச்சனையையும் மாற்றும் திறனாளியாக ஒளியுடன் வாழ்க்கை நடத்துகிறார். ஒற்றைக் காலுடன் 68 வயதில், முடங்கி கிடக்கும் இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் பகுதியைச் சேர்ந்த சந்தன சிலுவை என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி. கால் மாற்றுத்திறனாளியான இவர் ஒற்றை கால் இல்லாமலேயே பனை ஏறும் தொழில் செய்து வருகிறார்.

ரேடியோ செட் போடும் தொழில் செய்து வந்த அவர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சை செய்து ஒரு புறம் உள்ள காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

எனினும் அவர் தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியை கைவிடாமல் ஏதாவது ஒன்றை எப்படியாவது சாதிக்க வேண்டுமென அவருக்குள் ஏற்பட்ட உந்துதல் காரணமாக தற்போது பனைமரம் ஏறும் தொழிலை கற்று பனையேறும் தொழில் செய்து வருகிறார்.

Advertisement

பெரிய சைஸ் ஏணி ஒன்றை மரத்தில் கட்டிவைத்து ஒற்றை காலுடன் பணைமரத்தில் ஏறுகிறார். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஏறி விடுகிறார்.

பின்னர் மரத்தின் உச்சிக்கு சென்றபிறகு மரத்தின் ஓலைகளுக்கு நடுவில் அமர்ந்து அங்கிருந்து பதநீரை எடுத்துவிட்டு கீழே இறங்குகிறார்.

மேலும் ஏணி இல்லாத பனை மரங்களில் பெரிய அளவிலான ஒரு ஏணியை தானே உருவாக்கி வைத்துள்ளார். அதன் பிறகு பதநீரை இறக்கி விட்டு மிக எளிமையாக மீண்டும் கீழே இறங்குகிறார்.

இரு கால்களும் திடமாக உள்ள ஒரு சாதாரண நபர் பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் ஒற்றைக்காலில் பனைமரத்தில் ஏறி இறங்குவது அப்பகுதியில் உள்ளோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.