போதை ஆசாமியால் இருளில் மூழ்கிய கிராம மக்கள்

237

சத்தியம் செய்தி எதிரொலியாக தூத்துக்குடியில் மதுபோதையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இருளில் மூழ்கடித்த, மின் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்ப புரத்தில் உள்ள மின்நிலையத்திலிருந்து, 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகமாகி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் பாலசுந்தரம் என்பவர், இரவுப்பணிக்கு போதையில் வந்ததாக கூறப்படுகிறது. போதை மயக்கத்தில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து மின்சாரமின்றி அவதிப்பட்ட கிராமமக்கள், மின் நிலையத்துக்கு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சக மின் ஊழியர்கள் மின் இணைப்பைச் சரி செய்த நிலையில், இது தொடர்பான செய்தி சத்தியம் தொலைக்காட்சியின் நேற்று ஒளிப்பரப்பானது. அதனடிப்படையில், சத்தியம் செய்தி எதிரொலியாக கிராமங்களை இருளில் மூழ்கடித்த, மின் ஊழியர் பாலசுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சாத்தான்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவீந்திரம் பிறப்பித்தார்.