தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், . ‘ப்ளூ’ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருவதாக கூறியுள்ளார். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும், அண்மைக் காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ள அவர், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் , யதார்த்தமான கள நிலவரத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.