தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்….

247
Advertisement

கில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. ஆனால், இந்தப் போட்டியில் பங்குபெற வேண்டிய மாணவர்களை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தேர்வு செய்யவில்லை. இதனால், 247 மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வலியுறுத்தி அனுப்பப்பட்ட கடிதத்தை, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கல்வித்துறை உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசிற்கு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவின் பேரில், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.