விபரீதமாக மாறும் வைட்டமின் மாத்திரைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

217
Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற ஒற்றை வார்த்தை தான் மருத்துவ சந்தையில் அதிக லாபம் ஈட்டி வருகிறது.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நீண்ட நாள் வாழ என வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உடல்நலக்குறைவு இருக்கும்போது மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மருந்துகளை, வருடக்கணக்கில் எடுத்துக் கொள்வதை பலரும் வழக்கமாக்கி வருகின்றனர். அவ்வாறு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நீண்ட காலங்களுக்கு எடுத்து கொள்ளும் வைட்டமின் மாத்திரைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான வைட்டமின் C, சிறுநீக கற்கள் உருவாக காரணமாக அமைவதாகவும், தேவைக்கு அதிகமான வைட்டமின் D சிறுநீரக செயல்பாட்டை பாதிப்பதாகவும் தரவுகளில் தெரியவந்துள்ளது. உடலில் வைட்டமின் A அளவு தேவைக்கு மேல் உயரும் போது தலைவலி, குழப்பமான மனநிலை மற்றும் நுரையீரல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

தேவைக்கு அதிகமான வைட்டமின் E மூளையில் இரத்த கசிவையும், அதிகபட்சமான வைட்டமின் K பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது. புற்றுநோய், காச நோய் பாதிப்பு, சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

அதே போல, கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக கர்ப்பிணிகளும் வைட்டமின் குறைபாடுள்ளவர்களும் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்து கொள்ளலாம். ஆனால், ஆரோக்கியமான ஒரு நபர் மருத்துவ ஆலோசனையின்றி வைட்டமின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுப்பது தேவையற்ற உடல் உபாதைகளை கொண்டு வரும் என்பதால், மாத்திரைகளை தவிர்த்து சரிவிகித உணவு முறை மூலம் சத்துக்களை பெறுவதே உடல்நலத்திற்கு உகந்தது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.