அரபிக் கடலில் உருவாகி இருக்கும் பைபர்ஜாய் புயல் 12 மணி நேரத்தில் மிகவும் தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம், 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (06.06.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை 05 :30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் “பைபர்ஜாய்” புயலாக மேலும் வலுவடைந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு – வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று நாட்களில் நகரக்கூடும்.
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.202) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.