ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுக்குமே நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியுடன் எரிபொருள் விலை உயர்வு செய்தியும் உடன் வருகின்றது. மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மற்றும் உள்ளூர் துணை நிறுவனமான லங்கா ஐஓசி எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, இலங்கையின் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியமும் விலையை உயர்த்தியுள்ளது.இதனால், டீசலின் விலை 55 ரூபாயும், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாய்யும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒக்டேன்- 92 வகைப் பெட்ரோல் ஒரு லிட்டர் 254 ரூபாய் எனவும், ஒக்டேன் 95 வகைப் பெட்ரோலின் விலை 283 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த பலமாதங்களாகவே இலங்கையில் நிகழும் பொருளாதார சூழலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான பணவீக்கமும் , பெரும் அளவிலான கடன் சுமையுமே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார காரணிகளை கொண்ட இந்த நிலையால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் தான் என குமுறுகிறார்கள் அந்நாட்டு மக்கள்.