சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

204

மின் கட்டண உயர்வை எதி்ர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர், ஏன் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் கொடிசியா வளாகத்தில் நேற்று புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், புத்தக கண்காட்சியை காண பேருந்துகளில் அழைத்து வரப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அ.தி.மு.க. அரசு மின் வாரியத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையை விட்டுச் சென்றதாக கூறினார். மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை, தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி மின் மிகை மாநிலம் என பொய் பிரச்சாரம் செய்ததாக குற்றம்சாட்டினார்.

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் பத்தாயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மானியமும், முப்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதி நிறுத்தப்பபடும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்