“நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்”

130

சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிறகு சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் வந்தபொழுது வள்ளுவர் கோட்டம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.

வள்ளுவர் கோட்டம் ரூ. 30 கோடி செலவில் சீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுப் பணித் துறை சார்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மேலும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலக செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.