தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

145
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.

இவர் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். முறப்பாடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் செயல்படும் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, திடீரென புகுந்த 2 மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். கழுத்து, தலை மற்றும் கையில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த லூர்து பிரான்சிஸ், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், லூர்து பிரான்சிஸின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். லூர்து பிரான்சிஸ் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மணல் கொள்ளைக்கு எதிராக VAO லூர்து பிரான்சிஸ் கடந்த 13ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், அதன் காரணமாகவே லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர் என்றும் அவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.