சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் பாட்டு, நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவிகள் மீது பேராசிரியர் ஒருவர் உட்பட 4 பேரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகப் புகார் எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக முன்பே சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து காவல் துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் மாணவ, மாணவிகளின் போராட்டம் இன்று ஓய்ந்தபாடில்லை.
கலாக்ஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் இன்றும் மாணவி, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணி முதல் மாநில மகளிர் ஆணையத் தலைவர் விசாரணையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி நிர்வாகம் குற்றத்தில் தொடர்புடைய பேராசிரியர் உட்பட 4 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆயினும் அதில் போதுமான சமாதானம் அடையாத மாணவ, மாணவிகள் அமைப்பு தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மே 6 ஆம் தேதி வரை கல்லூரி மூடப்படுவதாக நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கலாக்ஷேத்ரா மாணவ, மாணவிகள் தரப்பு மின்னஞ்சல் மூலமாக இவ்விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஒன்றிய கலாச்சார அமைச்சகம் இரண்டு தரப்புக்கும் புகார் அளித்துள்ளனர்.