பெரும்பான்மை மக்களின் favourite உணவுப்பட்டியலில் இடம் பிடித்துள்ள சிக்கனை வைத்து செய்யக் கூடிய சமையல் வகைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
சுவை, ஊட்டச்சத்து, சாமானிய மக்களால் வாங்கக் கூடிய விலை என சிக்கன், பல கிட்சன்களில் ஹிட் அடிக்க காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால், அவ்வப்போது வாங்கி பயன்படுத்தும் சிக்கன் தரமானதா என்பதை சோதித்து பார்ப்பது அவசியம். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் சிக்கன் புதிதாக வெட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம். இறைச்சி வெளிர் நிறத்திலோ சாம்பல் நிறத்திலோ இருந்தால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். புதிதாக வெட்டப்பட்ட கோழி உறுதியாக சற்றே மென்மையாக இருக்கும்.
கொழ கொழவென கைகளில் ஒட்டும் தன்மை இருந்தால் சிக்கன் பழையதாகி விட்டதென தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைச்சியில் சிறிது வாசனை வருவது இயல்பு. ஆனால், வழக்கத்திற்கு மாறாக கெட்டுப்போன முட்டை போல கோழியில் வாடை வந்தால், அந்த இறைச்சியை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
கோழி இறைச்சியில் பச்சை அல்லது மஞ்சள் நிறத் திட்டுகள் இருந்தாலும் அவற்றை உபயோகிக்க கூடாது. மேலும் பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் அதிக நாட்கள் இறைச்சியை வைத்து பயன்படுத்துவதை தவிர்த்து அவ்வப்போது தேவைக்கு புதிதாக வாங்கி சமைத்து உண்பதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறை ஆகும்.