உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவ நடவடிக்கையின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது . ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் கூட்டத்தில் , சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் எண்ணெய் தின் பண்டங்கள் தயார் செய்வதற்கு அதிக செலவு ஆகுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்ததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் , வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்படும் என பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராவ் கூறியுள்ளார்.
பெங்களூரை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.