செஸ் ஒலிம்பியாட் பாடல் நிகழ்ச்சியால் தொடரும் சர்ச்சைகள்

226
Advertisement

கடந்த ஜூலை 28ஆம் தேதி, தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கண்களுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கியது.

விழாவில், Dhee பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் அரங்கையே அதிர வைத்தது. எனினும், 2020ஆம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடலின் வரிகளை எழுதி பாடிய அறிவு என அழைக்கப்படும் அறிவரசன் கலைநேசன், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அறிவு என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக ஆறு மாதங்கள் தூக்கமில்லாமல் உழைத்ததாகவும், தலைமுறைகளை தாண்டிய ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டும் தனது பாடலை யார் எடுத்துக் கொண்டு போனாலும் இறுதியில் வாய்மையே வெல்லும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அறிவுக்கு உரிய அங்கீகாரத்தை தொடர்ந்து அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், அறிவு அமெரிக்கா சென்றிருந்ததாலேயே விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும், இந்த சர்ச்சை தொடர்பான உரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடல் வெளியானதில் இருந்தே, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூன்றாக பங்கிடப்பட்டே வருவதாகவும், என்ஜாய் எஞ்சாமியின் வெற்றியில் எப்போதும் மூன்று பெரும் பங்கு பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என Dheeயும் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்படி விளக்கங்கள் ஒருபுறம் வலம் வந்தாலும், முதலில் இருந்தே இந்தப் பாடல் தொடர்பாக பல தளங்களில் அறிவுக்கு, முழு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.