சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த மருத்துவமனையை திறந்துவைக்க, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை விமான நிலையம் சென்ற நிலையில், முதலமைச்சர் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளார்.