வாழை நார், கற்றாழையில் புத்துணர்ச்சியூட்டும் புது சேலைகள்..

186
Advertisement

தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவாளர்கள் வேலை இழந்து, வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல இன்னல்களுக்கு மத்தியில் இன்னும் சிலர் தங்கள் தொழிலை விடாமல் தொடர்ந்து நெசவு செய்து வருகின்றனர். அதில் அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவுக் குழுவில், நெசவாளர்கள் இணைந்து தயாரிக்கும் மூலிகை நார் சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இங்கு பெண்களும் இணைந்து இந்த பணியை செய்து வருகின்றனர். இதேபோன்று, இவர்கள் வாழை நாரை பயன்படுத்தி சேலை தயாரித்து வருகின்றனர். கற்றாழை, மூங்கில், எருக்கன், வெட்டிவேர், தேங்காய், அன்னாசி போன்ற இயற்கை நார்களில் பருத்தி சேலைகளை தயாரிக்கும் அனகாபுத்தூர் கைத்தறி நெசவாளர்கள், அடுத்ததாக தாமரையில் இருந்து சேலை தயாரிக்க, இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவுக் குழுமத் தலைவர் சி.சேகர் கூறுகையில்…

ஏற்கனவே நாங்கள் வெளிநாட்டில் பலருக்கு வெட்டிவேர் சேலை உள்ளிட்ட பல்வேறு வகை சேலைகளை தயாரித்துள்ளோம். பல சேலைகளை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இயற்கை நார்களைக் கொண்டு இவ்வளவு ஆடைகளை உருவாக்கி சாதனைப் புத்தகத்தில்கூட இடம்பிடித்த எங்களுக்கு அரசு சார்பில் போதிய உதவிகள் எதுவுமே கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

தான் சிறு வயதிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வருவதாகவும், தற்போது இயற்கை நார் நெசவு முறையில் நேசவு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.இந்த குழுவில் இணைந்து பணிபுரியும் நெசவாளர் மோகன கிருஷ்ணன் தெரிவிக்கையில், சிறுவயது முதலே இந்த நெசவு தொழில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த குழுவில் இணைந்து இயற்கை நார் நெசவு முறை கற்று கொண்டு நெசவு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

பலமுறை அரசாங்கத்திடம் மனு கொடுத்தும், அதிகாரிகளைச் சந்திக்க முயன்றும், அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை இதுவரை செயலில் நிறைவேற்றவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்த சேலையில் வெட்டிவேர் நார், எண்ணெய் மற்றும் பருத்தி சேர்த்து ஜியோமெட்ரிக் டிசைனில் தயாரித்துள்ளோம் என்றும் இயற்கையாக நறுமணம் கொண்ட இந்தச் சேலையை அணிந்தால், பல மணி நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என சேகர் தெரிவித்தார்.

எனவே அரசு தங்களுக்கு வேண்டிய இட வசதியையே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர் நெசவு தொழிலாளர்கள்.

-மனோகரன்