நாடு முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரிய மதப் பிரிவினையை தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் மசூதி ஒன்றில் நடைபெற்ற அஞ்சு மற்றும் ஷரத் ஆகியோரின் இந்து திருமணம் கவனம் ஈர்த்துள்ளது.
அஞ்சுவின் தாயார் பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த நிலையில், ஆலப்புழாவில் உள்ள செருவல்லி முஸ்லீம் ஜமாத் மசூதி, அஞ்சுவின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்தியுள்ளது. மணப்பெண்ணுக்கு 10 சவரன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரொக்கம் வழங்கியுள்ள மசூதி நிர்வாகம், 1000 பேருக்கு சைவ உணவு சமைத்து பரிமாறியுள்ளனர்.
திருமணத்தில் கலந்து கொண்ட ஆலப்புழா எம்.பி. MA.ஆரிஃப் கான், மத ரீதியான பகுப்புவாதம் பரவி வரும் சூழலில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இந்த திருமணம் அமைந்துள்ளதாக கூறியதோடு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏஆர்.ரஹ்மான் மனிதநேயம் நிபந்தனை அற்றதாகவும் வேறுபாடுகளின் வலியை ஆற்றுவதாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வைரல் ஆகி வந்த இந்த வீடியோவை ஏஆர் ரஹ்மான், கேரளா ஸ்டோரி ரிலீஸின் போது பதிவிட்டது கவனம் ஈர்த்துள்ளது.