திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்….

126
Advertisement

ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் – கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கமலினி பிரவத்திற்காக கடந்த 22ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் மருத்துவமனையில் இருந்துள்ளனர். மருத்துவமனையில் கமலினியின் பக்கத்தில் கருச்சிதைவால் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணிக்கு, உமா என்ற பெண் உதவி செய்து வந்துள்ளார்.

உமா கமலினிக்கும் உதவி செய்து வந்த நிலையில், குழந்தையை இன்குபேட்டரில் வைக்க செவிலியர்கள் குழந்தையை கேட்டதாக கூறி, உமா குழந்தக்யை வாங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து வேலைக்கு சென்ற அர்ஜூன் மருத்துவமனைக்கு வந்த போது, குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. உமா குழந்தையை கடத்திச் சென்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.