“48% மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்”-கணக்கெடுப்பில் அதிர்ச்சி முடிவுகள்

285
Advertisement

மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021  ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.ஆய்வின் முடிவுபடி,

நாடு முழுவதும் குறைந்தது 48% மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாகச் செல்கின்றனர்,18 சதவீதத்தினர் மிதிவண்டியிலும் ,9% பேர்  பள்ளி மற்றும் பொதுப்  போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.25 சதவீத பள்ளிகளில் மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லை என்றும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

720 மாவட்டங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 34 லட்சம்  மாணவர்களிடம் நடத்திய ஆய்வின்படி, சுமார் எட்டு சதவீத மாணவர்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்தைப் பயன்படுத்தி (இரு சக்கர வாகனம்) பள்ளிக்குச் செல்கிறார்கள், மேலும் மூன்று சதவீதம் பேர் நான்கு சக்கர வாகனத்தில் வருகிறார்கள் .

கடந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, முடிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், அதற்கான  தீர்வு காணுவதற்கும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கணக்கெடுப்பின்படி, 87 சதவீத பள்ளிகள், கற்றலில் குழந்தைகளை எவ்வாறு பெற்றோர்கள் ஆதரிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.

18 சதவீதம் பேர் தங்கள் தாய்மார்களுக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது என்றும், 7 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பின்றி கல்வியறிவு பெற்றவர்கள் என்றும், ஐந்து சதவீதம் பேர் தங்கள் பள்ளிப்படிப்பு ஆரம்ப நிலைக்கு கீழே இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

கணக்கெடுப்பில் பங்கேற்ற ஐந்து லட்சம் ஆசிரியர்களில், 58 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே “புதிய தேசிய கல்விக் கொள்கை” (NEP) குறித்த விவாதங்களில்  பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.