ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியைச் சார்ந்தவர் 59 வயது நிரம்பிய முருகன்(59). இவரது மனைவி 50 நிரம்பிய கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து எடுப்பது வழக்கம்.
அப்படி ஜலித்து எடுக்கும்போது, அவர்களுக்கு ஒரு தங்க கட்டி கிடைத்துள்ளது. இதனை என்ன செய்வதென்று யோசித்த அவர்கள், இந்த தங்கக் கட்டியில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து சோளிங்கர், திருத்தணி, அரக்கோணம் ஆகிய ஊர்களில் விற்று பணமாக்கி உள்ளனர். அந்த பணத்தைக் கொண்டு முருகன் தனது வீட்டின் கட்டிட வேலைகளை செய்துள்ளார். மேலும், வீட்டுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என வாங்கி வைத்துள்ளார். திடீர் பணக்காரனாக மாறிய முருகன் மீது அதேப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரக்கோணத்தைச் சேர்ந்த முருகனின் உறவினரான கைனூரைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய மனோஜ் (24 ) என்பவர் தனது நண்பர்களான திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த 28 வயது சுரேஷ் (28), 24 வயது சரவணன் (24), அரக்கோணம் மோசூரைச் சேர்ந்த 26 வயது ஜெயக்குமார் (26) ஆகியோர் முருகனை மிரட்டி உள்ளனர்.
மேலும், உங்களிடம் நிறைய தங்கக் கட்டிகள் உள்ளன. அதில் எங்களுக்கு சில கட்டிகளை தர வேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதில் பயந்து போன முருகன், ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் தனது வீட்டின் பின்புறம் மரத்தின் அடியில் மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருந்த தங்கக்கட்டி மற்றும் ஒரு பையில் புதைத்து வைத்திருந்த ரொக்கப் பணம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்து போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டதில, அரக்கோணம் மசூதி தெரு அருகில் நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை ஜலித்தபோது தங்கக்கட்டி கிடைத்ததாக தெரிவித்துள்ளார். முருகனுக்கு கழிவுநீர் கால்வாயில்தான் தங்கக்கட்டி கிடைத்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டனர்.
மேலும் அவரிடம் ஒரு தங்கக்கட்டி தான் உள்ளதா? வேறு எங்கேயும் புதைத்து வைத்துள்ளாரா? என்றும் அவரது வீட்டின் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
தங்கக்கட்டி திருடு போனதாக யாராவது புகார் கொடுத்தால் கைது நடவடிக்கை தொடரும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அரக்கோணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் முருகனை மிரட்டியது தொடர்பாக, முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது உறவினரான கைனூரைச் சேர்ந்த மனோஜ் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.