வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிங்கார சென்னை 2.0.’ திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும், ரூ.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2-ம் கட்டமாக 20 கி.மீ. நீளத்துக்கும், கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ஆசிய வங்கியின் வளர்ச்சி நிதி உதவியுடன் ரூ.3 ஆயிரத்து 220 கோடியில் 769 கி.மீ. நீளத்துக்கும், கோவளம் வடிநில பகுதிகளில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.150.47 கோடியில் 39 கி.மீ. நீளத்துக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் விடுபட்ட 144 இடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.119.93 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின்கீழ் ரூ.26.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 9.80 கி.மீ. நீளத்துக்கும், புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.41 கோடி மூலதன நிதியில் 2 கி.மீ. நீளத்துக்கும், தமிழக அரசின் வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதியின் கீழ் ரூ.291.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 107.56 கி.மீ. நீளத்துக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.அதன் காரணமாக
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்-தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மண்டல கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
அதன்படி, சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட 65-வது கோட்டம் பூம்புகார் நகர் பகுதியில்
கண்காணிப்பு அதிகாரி ரஞ்சித் ஐஏஎஸ் தலைமையில், 6-வது மண்டல அலுவலரும் உதவி ஆணையாளருமான முருகன் ஆகியோர் நேற்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.அப்போது சென்னை மாநகராட்சி 6-வது மண்டலத்தின் செயற்பொறியாளர் செந்தில்நாதன்,உதவி செயற்பொறியாளர் ரவி வர்மன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.