ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநிலத்தின் முதல்வருமான நிதிஷ் குமார் , அம்மாநில பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பக்தியார்பூர் நிதிஷ் குமாரின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரும் திரளாகத் திரண்டு வந்த மக்கள் நிதிஷ் குமாரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு பக்தியார்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த பயணத்தின் போது, முதல்வர் நிதிஷ் குமார் பக்தியார்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றபோது , அங்கு திடீரென பின்னால் இருந்து வந்த இளைஞர் ஒருவர், முதல்வர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் முதல்வருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
டி சார்ட் அணிந்து வரும் இளைஞர் ஒருவர் முதல்வரை பின்னால் இருந்து தாக்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அருகிலிருந்து வரும் பாதுகாவலர்கள் அவரை பிடித்துச் செல்கின்றனர்.
விசாரணையில் முதல்வரைத் தாக்கிய நபர் பக்தியார்பூரில் உள்ள முகமதுபூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சங்கர் என்ற சோட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். அந்த நபர் எதற்காக முதலமைச்சரைத் தாக்கினார் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் முதல்வர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது .