அதிமுக பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்களது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்குமார் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மூவரும் அதிமுக எம்எல்ஏக்களாக சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்று பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முடிவு பேரவைத் தலைவருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டால், அவர்களை சுயேச்சை எம்எல்ஏக்களாக தனித்து இயங்க அனுமதிக்க முடியும்.
அப்படி தெரிவிக்காத பட்சத்தில் கொறடா உத்தரவை மீறினால் அவர்களை எம்எல்ஏக்கள் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைக்கப்படலாம். ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கே உள்ளது.
சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானவுடனேயே சபாநாயகர் அவரை சுயேச்சையாக அங்கீகரித்தார். இதனால் தனது பதவிக்காலம் முடியும்வரை சசிகலா புஷ்பா எம்.பி. பதவியில் நீடித்தார். அதேநிலையை தமிழக சட்டப்பேரவைத் தலைவரும் பின்பற்ற முடியும்.
இனி நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.