“சிலம்பம் சுற்ற தேவை ‘கை’  அல்ல நம்பிக்கை…”கை இழந்த இளைஞர்… சிலம்பம் ஆசிரியர் ஆன கதை

267
Advertisement

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், குத்துச்சண்டை, மான்கொம்பு, கபடி, நீச்சல்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் பாரம்பரிய தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.

இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளை பொது இடங்களில் விளையாட விடுவதே குறைந்து செல்போன், டிவி என மூழ்கியுள்ளனர். இதனால், கண் பார்வை கோளாறு மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடிய சூழலில் இன்றைய மாணவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதிலிருந்து மாணவர்களை மீட்டெடுப்பதோடு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்தைப் போக்கி எந்தவித சூழலையும் எதிர்த்து போராடி வெற்றிபெறும் மன தைரியத்தை ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சியை கற்றுக்கொடுத்து வருகிறார், மாற்றுத்திறனாளரான பொறியியல் பட்டதாரி இளைஞர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புழுகார்பேட்டைத்தெருவைச் சேர்ந்தவர் 29 வயது விமல்(எ) வெங்கடேஷ். இவர், டிப்ளோமா மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு கிராமப்புற மற்றும் நகர்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய குடும்ப மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். சிறு வயது முதல் சிலம்பம் பயிற்சி பெற்றுவந்த வெங்கடேஷ், மாவட்ட அளவில் மாநில அளவில், சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்கள், சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தனது இடதுகையை இழந்துவிட்டார். கையை இழந்தாலும் தான் கற்ற கலை அழிந்து விடக்கூடாது, இன்றைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய கலைகளை கற்றுகொடுத்து, அதனை ஒளிம்பிக் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு, சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார்.

இதுகுறித்து வெங்கடேஷ் சத்தியம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சிறுவயது முதல் சிலம்பம் பயிற்சி பெற்றேன். நமது பாரம்பரிய கலையான சிலம்பத்தை இன்றைய தலைமுறையினருக்கு கற்றுகொடுக்க வேண்டுமென்ற ஒரே நோக்கில், தற்போது பயிற்சி அளித்து வருகிறேன். அதற்கு முக்கிய காரணம் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விபத்தில் எனது இடதுகையை இழந்ததே” என்று கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில்.,

 “இன்றைய சூழலில் மாணவர்கள் மன தைரியம் குறைந்து மன அழுத்தத்தால் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதனை தவிர்க்கும் வகையிலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மனதைரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த சிலம்பக் கலை பயிற்சியை அளித்து வருகிறேன். என்னிடம் பயின்றுவரும் மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவி கீர்த்தனா சத்தியம் தொகைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாரம்பரிய கலையான சிலம்பத்தை, ஆசிரியர் விமல் மூலமாக நன்றாக கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்.,

இந்த கலையை பற்றி பேசிய சிலம்ப ஆசிரியர் விமல், வேலை வாய்ப்பில் சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பிற்கு கடந்த ஆண்டு முதல் சிலம்பத்தை சேர்த்திருக்கிறார்கள். பாரதியார் விளையாட்டு போட்டியில், முதல்வர் கோப்பை போட்டியில் சிலம்பத்தை இணைத்துள்ளனர்.

தற்போது, சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளித்துகொண்டு இருக்கிறேன். நமது பாரம்பரிய கலையை அழியவிடக்கூடாது. விளையாட்டில் நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் பயிற்சி அளிக்கிறேன். சிலம்பம் வளர்ச்சி அடைந்தால் பொருளாதார அளவிலும் வளர்ச்சி கிடைக்கும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால் மாணவர்களுக்கு மனம், புத்தி உறுதியாக இருக்கும்.

சிலம்பத்தில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, தொடுமுறை போன்ற பல போட்டிகள் உள்ளன. தொடுசிலம் என்பது அரசு அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு தொடுமுறை போட்டி என்று பெயர். மாநில அளவில் மட்டுமே முடிவடைந்துவிடும் சிலம்பப்போட்டியை ஒலிம்பிக் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிலம்பத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்றவாறு மாவட்டம்தோறும் அரசு பள்ளிகளில் சிலம்ப ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசும், விளையாட்டு ஆர்வலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென சிலம்ப ஆசிரியர் விமல் கோரிக்கை வைத்துள்ளார்.