இந்த மாதம் 11ஆம் தேதி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது.இப்படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு என்ன தான் காரணம் அப்படி அந்தப் படத்தில் என்ன தான் காட்டப்பட்டுள்ளது என பலர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணியை கதைக் களமாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம் விவேக் அக்னிஹோத்ரி என்பவரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டது. 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு படம் திரையிடப்பட்டு வருகிறது.
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், தாத்தாவுடன் டெல்லியில் வசித்தவாறே ஜேஎன்யூவில் படித்து வருகிறார். தன்னுடைய பெற்றோர் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, தாத்தா அனுபம் கெர் தெரிவித்ததை நம்பி வருகிறார். தன்னுடைய ஜேஎன்யூ ஆசிரியை ராதிகா மேனன் கூறுவதையும் அப்படியே நம்புகிறார். எனினும் தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவரின் அஸ்தியைக் கரைக்க, காஷ்மீர் செல்லும் மாணவருக்கு வேறோர் உலகம் விரிகிறது. தனது பெற்றோர் வன்முறையில் கொல்லப்பட்டதை அறிந்துகொள்கிறார். அந்தக் கல்லூரி மாணவனின் பயணமே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம். இதில் ஆர்ட்டிகிள் 370 குறித்தும் பேசப்படுகிறது.