நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்

241
Advertisement

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 300 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் பரவியது.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது.

இந்த போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோல் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.