சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 13.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது.

பெங்களூரு அணி முதல் விக்கெட்டை இழந்ததும் அந்த அணியின் ரன் வேகம் குறைந்ததுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சென்னை அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 7வது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.