Monday, June 23, 2025

7 மடங்கு லாபம் பார்த்துக் கொடுத்த விஜயகாந்த்… அவருக்கா இந்த பண கஷ்டம்..கேப்டன் கல்லூரிக்கு வந்த நிலைமை?

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் தான் விஜயகாந்த். ரீலில் மட்டுமில்லாம் ரியலிலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.. அந்த அளவுக்கு பெயரையும், புகழையும் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவர் செய்த உதவிகளும், செயல்களும் காலம் கடந்து நிலைத்து நிற்கும். அப்படி விஜயகாந்த் செய்த உதவியால் முன்னேறிய ஒரு தயாரிப்பாளர் டி சிவா. இவர் அம்மா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய சொந்த ஊரில் கேமராவை வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். சினிமா ஆசையோடு சென்னைக்கு கிளம்பி வந்த டி.சிவா வரும்போது தன் வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயையும் எடுத்து வந்திருக்கிறார்.
சென்னைக்கு வந்து விஜயகாந்திடம் கால்ஷீட் கேட்டதும் அவரும் உடனடியாக கொடுத்திருக்கிறார். அப்படி உருவான திரைப்படம் தான் ‘சொல்வதெல்லாம் உண்மை’. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக ரேகா நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதனால் ஒன்றரை லட்சம் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் டி சிவா, திரும்ப சொந்த ஊருக்கே சென்று ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கடுத்து ஒரு நாள் விஜயகாந்தும் அவரது நண்பர் ராவுத்தரும் பேசிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் சிவா நினைவுக்கு வர, உடனே சென்னைக்கு கிளம்பி வரச் சொல்லி அழைத்தார் விஜயகாந்த். அவரை தங்களிடம் ஒர்கிங் பார்ட்னராக சேர்த்து தாங்கள் தயாரித்த ஒரு படத்தில் இருந்து கிடைத்த லாபத்தில் இருந்து 25 சதவீதத்தை சிவாவிடம் கொடுத்தாராம், அதன் மதிப்பு ரூ.7.5 லட்சம் இருக்குமாம். அது சிவா விஜயகாந்த் திரைப்படத்தை தயாரித்து நஷ்டமடைந்ததை காட்டிலும் 7 மடங்கு அதிகம் கூறுகின்றனர்..

இந்த நிலையில் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி ஒரு சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கைமாறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.. அதாவது அந்த கல்லூரியை, தனலட்சுமி பொறியியல் கல்லூரி நடத்தி வரும் சீனிவாசன் என்பவர் வாங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அந்த ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஏற்கனவே 5 கோடி ரூபாய் பேங்கில் கடன் நிலுவையில் இருந்த நிலையில், இப்போது அந்த கல்லூரி 150 கோடிக்கு விஜயகாந்த் குடும்பத்தினரால் விற்கப்பட்டிருக்கிறது என்பது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது..

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் பேசும்போது, “கல்லூரி கட்டியும் பெரிய தொகையை விஜயகாந்த் ஈட்டவில்லை.. காரணம் அரசு கோட்டாவில் வரும் மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் போடுவாராம் விஜயகாந்த். அப்போதுதான் ஏழை பிள்ளைகள் வந்து படிக்க முடியும் என்பதால், அரசு கோட்டா மாணவர்களுக்கே முன்னுரிமை தந்துள்ளார்.. அரசு எந்த கட்டணத்தை விதிக்கிறதோ அந்த கட்டணத்தை மட்டுமே வாங்கியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அந்த கட்டணத்தைகூட செலுத்த முடியாத மாணவர்களுக்கு விஜயகாந்த்தே கல்வி கட்டணத்தை கட்டிவிடுவாராம். அப்படிப்பட்ட கல்லூரி இன்று கைமாறுவதை கேள்விப்படும்போது வருத்தமாக உள்ளது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news