ஜன்னலில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை; ஹீரோவான இந்தியர்… வைரல் வீடியோ

கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல்தள ஜன்னலில் இருந்து தவறி விழும் நிலையில் இருந்த 3 வயது சிறுமியை இந்திய வாலிபர் ஒருவரும், போலீஸ்காரரும் இணைந்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த மீட்பு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சம்பவத்தன்று, அந்தக் கடையின் மேல்தள ஜன்னல் பகுதிக்கு சென்ற சிறுமி எதிர்பாராத விதமாக கீழே விழும் ஆபத்தான நிலையில் சிக்கினார். ஜன்னல் விளிம்பைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவர் பயத்தில் அலறியதால், கீழே நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உதவிக்காக கூச்சலிட்டனர். ஒரு பெண் கீழே உள்ள ஜன்னல் வழியாக கையை நீட்டி சிறுமியை காப்பாற்ற முயன்றாலும், அவளது பிடி தளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முகமது ஜெசிலும், ஒரு போலீஸ்காரரும் உடனடியாக செயல்பட்டனர். அவர்கள் கடையின் மேற்கூரை வழியாக சென்று, சிறுமி விழும் இடத்துக்கு கீழே நின்று தயார் நிலையில் இருந்தனர். சில நொடிகளில் சிறுமி கீழே விழுந்தபோது, முகமது ஜெசில் அவளை லாவகமாக பிடித்தார். அருகில் இருந்த போலீஸ்காரர் இருவரையும் நிலைநிறுத்த உதவினார். இதனால் சிறுமி எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி இருவரையும் பாராட்டினர். உணவக மேலாளராக பணிபுரியும் ஜெசில், “நான் எந்த நாயகனும் இல்லை. ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதை பார்த்த தந்தையாக உதவினேன். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அவளை பிடிக்க உதவியிருக்கலாம்” என்றார்.

சிறுமியின் தந்தையும், ஜெசிலும் போலீஸ்காரரும் உண்மையான நாயகர்கள் என்று புகழ்ந்துள்ளார். இந்த மீட்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related News

Latest News