தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு என்பது அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெறுவதற்கும், பல்வேறு அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கட்டாயமாக இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காதவர்களுக்கு எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த இ-கேஒய்சி நடவடிக்கையின் முக்கிய நோக்கம் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்குவதும், தகுதியற்ற நபர்கள் மானியப் பொருட்களை பெறுவதைத் தடுப்பதுமாகும். குறிப்பாக, இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் தொடர்ந்து பொருட்கள் பெறுதல் மற்றும் ரேஷன் பொருட்களை முறைகேடாக பெற்று வெளியில் விற்பனை செய்வது போன்ற செயல்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள் ஜூலை 31-க்குள் அதை முடிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா என்பதை நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் உறுதி செய்து கொள்ளலாம். மேலும், ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயர்கள் இருந்தால், மரணச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்து நீக்கலாம். இதே சேவையை TNPDS இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
