தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் 9-ந்தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News