தென்மேற்கு பருவமழை குறையும் வாய்ப்பு… IMD எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) நிலை குறிப்பிடப்படுகிறது.

எல் நினோ நிலை தற்போது உருவாகி உள்ளதுடன், எதிர்காலத்தில் அது மேலும் வலுப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ஆனால் இந்த வெப்பநிலை இயல்பை விட சுமார் 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரித்தால், அது எல் நினோ நிலை உருவானதாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், அந்தப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மிதமான முதல் வலுவான எல் நினோ நிலை காணப்படுவதாகவும், ஆண்டின் இறுதியில் அது மேலும் வலுப்படக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வானிலை நிலவரங்களை கண்காணித்து வருகிறது. எல் நினோ தாக்கம் அதிகரித்தால், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யக்கூடும் எனவும், இதனால் வெப்பநிலை அதிகரித்து அசவுகரியமான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News