ரூ.2500 உரிமைத் தொகை முதல சிலிண்டர் வரை! 3 மாதங்களில் மாறப்போகுது! யார் இந்த ‘மான்டேக் சிங்’?

தமிழக அரசின் கஜானாவை நிரப்பவும், மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் முதலமைச்சர் விஜய் தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரப் புலி என்று அழைக்கப்படும் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு உயர்மட்ட வருவாய் பெருக்க குழுவை தமிழக அரசு அதிரடியாக அமைத்துள்ளது.

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நலத்திட்டங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

இந்தக் கடன் சுமையைக் குறைத்து, புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவே 6 பேர் கொண்ட இந்த வல்லுநர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? 1943-ல் பிறந்த இவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்தியாவின் 1991-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதாரச் சீர்திருத்தங்களில் இவருடைய பங்கு மிக முக்கியமானது. மத்திய நிதிச் செயலாளர், வர்த்தகச் செயலாளர் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பணியாற்றிய இமாலய அனுபவம் இவருக்கு உண்டு.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகளில் உயரிய பதவிகளை வகித்த இவருக்கு, இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இத்தகைய ஒரு ஆளுமை தற்போது தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக வருவது ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 மாதங்களில் இந்தக் குழு தனது விரிவான அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. குறிப்பாக வரி ஏய்ப்புகளைத் தடுப்பது, புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறிவது, அரசு நிலங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பணமாக்குவது போன்ற பணிகளில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

மேலும், மதுபான விற்பனை மற்றும் வரிவிதிப்பை முறைப்படுத்துதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவாயைக் கூட்டுதல் போன்ற அதிரடிப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்க உள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் மீது கூடுதல் வரிச் சுமை விழாமல், அரசின் வருவாயைப் பலமடங்கு உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் நிதி உதவி மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் எனப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை முறையாகத் திரட்டுவதே அலுவாலியா குழுவின் பிரதான இலக்காகும்.

கடனை வாங்கித் திட்டங்களைச் செயல்படுத்தாமல், மாநிலத்தின் சொந்த வருவாயை வலுப்படுத்தி தமிழகத்தை ஒரு கடன் இல்லாத மாநிலமாக மாற்ற முதலமைச்சர் எடுத்துள்ள இந்த முயற்சி, இந்திய அளவிலேயே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Related News

Latest News